புதிய அரசியல் யாப்பால் நன்மைகள் மிகக்குறைவே-சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கம் கொண்டு வர இருக்கின்ற புதிய அரசியல் யாப்பானது அதிகார மையத்தை மாகாணத்தில் இருந்து மாவட்டத்திற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் (CV Wigneswaran) தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை பேசுவதால் ஏற்படும் நன்மைகள் மிகக் குறைவாகவே காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் “ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தவும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர்.

எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பதுடன் அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதன்போது உரையாற்றிய சி.வி. விக்னேஸ்வரன் புதிய அரசியல் யாப்பின் உருவாக்கம் குறித்து தெளிவு படுத்தியிருந்தார்.

Spread the love