சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் இதுவரையில் 110-க்கும் அதிகமான வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. அதில், 21 மாநகராட்சிகளையும் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றுகிறது.
அதேவேளையில் எதிர்க்கட்சிகளான அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் டெபாசிட்டை இழந்தும், படுதோல்வியையும் தழுவி வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தற்போதைய நிலவரப்படி 110-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. தற்போது வரை அதிமுக 13 இடங்களிலும் மற்ற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்தனர்
334 ஆண்டுகள் பழைமையான சென்னை மாநகராட்சி தொடர்ந்து திமுக வசம் இருந்து வந்த நிலையில், முதன்முறையாக கடந்த 2011-ல் நடந்த தேர்தலின்போது அதிமுக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. தற்போது சென்னை மாநகராட்சி மீண்டும் திமுக வசம் வந்துள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்களை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.