“பறிக்காதே பறிக்காதே காணிகளை பறிக்காதே” என சபைக்குள் கோஷம் எழுப்பியும் பதாகைகளை ஏந்தியவாறும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வனஜீவராசிகள் சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தின்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள் சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றிய பின்னரே பதாகைகளுடன் எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள் பறிக்காதே பறிக்காதே. காணிகளை பறிக்காதே” “தமிழர் நிலங்களை பறிக்காதே” என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான சிறீதரன். சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.