அனைத்துலக கிறிஸ்தவ மக்களும் இன்றைய திருநீற்றுப் புதன் திருவழிபாட்டுத் திருப்பலிச்சடங்குடன் மீண்டுமொரு தவக்காலத்தினுள் நுழைகின்றனர். இந்தத் தவக்காலத்தின் நோக்கமானது கிறிஸ்து மனித விடுதலைக்காக பாடுகள், மரணத்தை ஏற்று உயிர்ப்பின் வழியாக புது வாழ்வைத் தந்த தியாகத்தை சிரம்தாழ்த்தி நினைவேந்தி எம்மைத் தயார்ப்படுத்துவதாகும்.
இந்தத் தவக்காலமானது வருடாவருடம் வந்துபோகும் ஒரு கொண்டாட்டமல்ல. எமது கடந்த கால பயணத்தை சீர்தூக்கிப் பார்த்து நின்று நிதானித்து முடிவெடுக்க அழைப்புவிடுக்கும் மனமாற்றத்தின் காலமாகும். இறைவன் விசேட விதமாக எம்மீது இரக்கத்தைப் பொழிய எம்மத்தியில் பிரசன்னமாகும் அருளின் காலமாகும். தவக்காலம் ஒப்புரவின் காலம், மீட்பின் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. முழு உலகத்தையும் போர்மேகங்கள் சூழ்ந்து பேரழிவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம், விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகளால் ஏற்பட்ட வாழ்வாதார நெருக்கடி, கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸின் கொலைவெறித்தாக்கம், இனவெறி, மொழிவெறி, நிறவெறி என பல முனைத்தாக்கங்கள் மத்தியில் நாம் சந்திக்கும் இந்தத் தவக்காலம் தகுந்த முறையில் நோன்பை அனுசரிக்க சந்தர்ப்பங்களைக் கைகொடுப்பதே காலத்தின் தேவையாக அமைகிறது. கூட்டொருங்கியக்க திருஅவையாக அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி ஒன்றிப்பு. பங்கேற்பு, மறைப்பணி என்ற தலைப்புக்களில் உலக ஆயர்கள் ரோமாபுரியில் ஒன்றுகூடி கலந்துரையாடி முடிவுகளை மேற்கொண்டு புதிய பாதையில் திருஅவையை வழிநடத்துவதே ஆயர்கள் மாமன்றத்தின் நோக்கமாகும்.
ஒன்றிப்பு – நாம் அனைவரும் வேறுபாடின்றி ஒரே தந்தையின் பிள்ளைகளாக வாழ்தல்,
பங்கேற்பு – ஒருவருக்கொருவர் செவிமடுத்து அனைவரும் ஈடுபாடுள்ள பங்களிப்பு செய்தல், மறைப்பணிநற்செய்திக்கு நற்சான்று பகர்ந்து தேவைக்கேற்ப பணிசெய்தல். கூட்டொருங்கியக்க கருப்பொருளும் தவக்கால கருப்பொருளும் ஒத்திசைவாக இருப்பதை அவதானிக்கமுடிகிறது.
இவற்றை நாம் தகுந்தமுறையில் முன்னெடுக்க வெளிவேடமற்ற உண்மையான மனமாற்றமே உதவும். இப்பொழுதாவது உண்ணாநோபிருந்து அழுது புலம்பிக்கொண்டு உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பிவாருங்கள். நீங்கள் உங்கள் உடையை அல்ல இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர். இரக்கம் மிக்கவர். நீடிய பொறுமையுள்ளவர். பேரன்புமிக்கவர். தவம் என்பது காவியுடை தரிப்பதும் முகவாட்டமாக இருப்பதும் அல்ல. மாறாக இதயத்தை உடைப்பது. அதிலிருந்து அன்பு, பிரிவு, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம், பகிர்வு போன்றவற்றை பிறர் சுவைக்கக் கொடுப்பது. இல்லார்க்கும். இயலார்க்கும் கைகொடுப்பது. ஆசைவலைகளில் அகன்று வேடமில்லா, கபடமில்லா இன, மத, பேதமில்லாவாழ்வு வாழ்வது. ஆனால், நாம் பகட்டிலும், ஆடம்பரத்திலும் சமூக கௌரவம் தேடி மாயச் சிந்தனையில் மயங்கி கிடக்கின்றோம். ஆடம்பரம் அகற்றி அளவோடு அனுபவித்து, எளிமையைக் கடைப்பிடித்து, எழைகளைத் தாங்கி நிற்பதே உண்மையான தவம் என உணரத் தவறிவிடுகின்றோம். ஈதல், இறைவேண்டல், நோன்பிருத்தல் ஆகிய செயல்களை புதிய கோணத்தில் முன்னெடுக்க அழைக்கும் இயேசுவின் பார்வையை எமதாக்குவோம். பக்திச் செயல்கள் தம்பட்டம் அடிப்பதற்கல்ல. எமக்குள் எம்மைத் தேடி நான் என்ற மன நிலையைவிட்டு நாம் என்ற பொதுநிலைக்கு எம் ஒவ்வொருவரையும் கொண்டுவரத் தேவையான அருமருந்து அவை என்றுணர்வோம். நம் அக ஆன்மிகம் இயேசுவின் ஆன்மிகமாகி நம்மில் ஒளிரட்டும். என் உடன் வாழ்வோர் சமூகத்தோர். திருஅவை, நாடு உலகம் என்ற பார்வையில் மகிழ்ச்சியும், உயர்ச்சியும், அமைதியும், சமத்துவமும் உருவாக என்னையே சாம்பலாக்க சம்மதிக்கின்றேன் என்பதன் அடையாளமாக இன்று நெற்றியில் ஏற்ற தவத்தலத்தின் மீது உறுதியுரை எடுத்து செயலாற்ற முயற்சிப்போம்.