கடன் வழங்க இலங்கைக்கு நிபந்தனை போடுகிறது இந்தியா!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வரைபடத்தையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது மூலோபாய திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான உத்தரவாதத்தையும் இந்தியா இலங்கையிடம்  கோரியுள்ளது.

இலங்கைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான நிபந்தனையாக இந்தக் கோரிக்கையை இந்தியா முன்வைத்துள்ளதாகவும், இலங்கையிடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் கொழும்பு ஆங்கில ஊடகமான ‘சண்டே ரைம்ஸ்’ நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய உணவு, மருந்துகள், எரிபொருள் இறக்குமதிகளுக்காக இலங்கை அவசர கடனைக் கோரியிருந்தது. கடந்த ஆண்டு டிசெம்பரில் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றிருந்தது. டிசெம்பரில் பெறப்பட்ட இந்தக் கடனும் இந்த வாரத்தில் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது ஒரு பில்லியன் டொலர் அவசரக் கடனை இந்தியாவிடம் இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில், பஸில் ராஜபக்சவின் இந்தியப் பயணம் இரு முறை பிற்போடப்பட்டுள்ளது. இந்தியா விதித்துள்ள நிபந்தனைகளுக்கு கொழும்பிடமிருந்து இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்காமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றி இந்தியாவின் மூலோபாய நலன்களை வலுப்படுத்தும் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துதல், இலங்கை விமானப்படைக்கான டோனியர் கண்காணிப்பு விமானம், திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைக்கான கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் அமெரிக்க கடற்படையின் முயற்சியான பஹ்ரைனை தளமாகக் கொண்ட உளவுத்துறை பகிர்வு அலுவலகமான இணைவு மையத்தில் இலங்கை கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்தல் ஆகியவை இந்தியாவின் நிபந்தனைகளில் அடங்கும்.

திருகோணமலைக்கு அருகிலுள்ள சம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சூரிய சக்தி) திட்டத்தை தொடங்குவது இந்திய அரசின் முக்கிய அழுத்தங்களில் ஒன்றாகும். அத்துடன் வணிக நடவடிக்கைகளுக்காக பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது மற்றும் யாழ்.குடா நாட்டில் பலகலாசார திட்டங்களைச் செயற்படுத்துவது என்பனவும் இந்த நிபந்தனைகளில் உள்ளடங்குகின்றன. இந்தக் கோரிக்கைகளுக்கு இலங்கைத் தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கப்படும் வரை, இந்திய நிதியமைச்சகம் கொள்கையளவில் இந்தியாவிடமிருந்து ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைத் தடுத்து வைத்திருக்கும் என்று அறிய முடிகின்றது.

Spread the love