யாழ்ப்பாணம், மாநகர சபையின் 2022, 1 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், பெரும் பரபரப்புக்கு மத்தியில் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதனால், அடுத்த ஒரு வருடத்துக்கு சபை முதல்வராக மணிவண்ணன் நீடிப்பார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு – செலவத்திட்டத்தை, மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சபையில் நேற்று முன்வைத்தார். அதற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், மணிவண்ணன் அணியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இதனால், யாழ். மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் ஓர் உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.