அகதிகளிடமிருந்து மதிப்புமிக்க பொருட்களை (நகை/பணம்) பறிமுதல் செய்ய டென்மார்க் அதிகாரிகளை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம், நோர்டிக் நாட்டில் பாதுகாப்பு கோரும் உக்ரேனியர்களுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் குடியரசு அதிகாரி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
இரஸ்யப் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பிற்காக அகதிகளாக டென்மார்க்கினுள் வரும் உக்ரேனியர்களுக்கு சர்ச்சைக்குரிய அகதிகள் ‘நகை சட்டத்தில்’ இருந்து அரசாங்கம் விலக்கு அளிக்க வாய்ப்புள்ளது என கடந்த வியாழனன்று (03)டென்மார்க் அரசின் குவரவு குடியகல்வு அதிகாரி ரஸ்மஸ் ஸ்ரொக்லுண்ட் (Rasmus Stoklund) எக்ஸ்ட்ரா பிளடெட் (Ekstra Bladet) என்கின்ற பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.
‘நகைச் சட்டம்’ எனப்படும் இந்தச் சட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு முந்தைய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் இருந்து 10,000 குரோனர்களுக்கு மேல் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பறிமுதல் செய்ய இந்த சட்டம் காவல்துறைக்கு அனுமதிக்கிறது.
இந்த நடைமுறை தற்போதைய அரசாங்கத்தால் மாற்றப்படவில்லை. இருப்பினும் 2019 இல் இருந்துஇந்தச் சட்டம் அரிதாகவோ அல்லது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
உக்ரேனியர்களுக்கு டென்மார்க்கில் வசிப்பது தொடர்பான விதி மாற்றங்களை அரசாங்கமும் பாராளுமன்றமும் பரிசீலித்து வருவதாகவும், எனவே அவர்கள் ஆரம்பத்தில் புகலிடச் சட்டங்களால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவே என்றும் ஸ்ரொக்லுண்ட் கூறினார்.
டென்மார்க் உக்ரேனுக்கு ஒரு பிராந்திய அண்டை நாடு என்று வாதிடுவதன் மூலம் நகைச் சட்டத்தில் அரசாங்கத்தின் புதிய நிலைப்பாட்டை அவர் நியாயப்படுத்தினார்.
டென்மார்க்கின் இந்த சர்ச்சைக்குரிய “நகைச் சட்டம்’ இயற்றப்பட்ட நேரத்தில் பெரும்பான்மையான அகதிகள் சிரியாவிலிருந்தே வந்துகொண்டிருந்தனர்.
“அருகில் இருக்கும் பாதுகாப்பான பிராந்தியத்தை அல்லது நாடுகளை விட்டு வெளியேறி, (பிற) பாதுகாப்பான நாடுகளை நோக்கி பயணம் செய்யும் அகதிகளை இலக்காகக் கொண்டே இந்த “நகைச் சட்டம்” உருவாக்கப்பட்டது. ஆனால் உக்ரேனியர்களின் நிலை அவ்வாறு இல்லை. நாங்கள் அவர்களுக்கு அருகிலுள்ள பகுதியில் இருக்கிறோம் ”என்று ஸ்ரோக்லண்ட் கூறினார்.