காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் தொடர்பான இரண்டு ஒழுங்கு விதிகளை அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அண்மையில் நடைபெற்ற காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. காணி அமைச்சர் கௌரவ எஸ்.எம்.சந்திரசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 155ஆம் மற்றும் 157ஆம் பிரிவுகளின் கீழ் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2021 ஒக்டோபர் 28ஆம் திகதி 2251/48 இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடங்கலாக 2022 பெப்ரவரி 07ஆம் திகதி 2266/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் 2022 ஜனவரி 15ஆம் திகதி 2262/50 இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடங்கலாக 2022 பெப்ரவரி 07ஆம் திகதி 2266/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பவற்றுக்கு இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், 2014 காணி அபிவிருத்தி ஒழுங்குவிதிகளின் 03ல் அ, ஆ, இ, ஈ மற்றும் உ பந்திகளில் தீர்மானிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் மானியங்களுக்கான பத்திரங்களை வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்படும் வருமான எல்லையை திருத்துதல் மற்றும் 1985ஆம் ஆண்டு காணி கட்டளை 115 இன் கீழ் வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரத்திரத்துக்கான அதிகுறைந்த பங்குகள் என்பன இந்த ஒழுங்கு விதிகளின் ஊடாக திருத்தப்படவுள்ளன.