தற்சமையம் நடந்து முடிந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு ஆட்சியை அமைப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரிய ஒரு வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் ஹிம்மாசல் பிரதேசம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளில் ஒரு கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும். அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்கிறார். ஆனால், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் யார் முதல்வர் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. உத்தரகண்ட் மாநிலத்தில் போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமி தேர்தலில் தோல்வி அடைந்தார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார்.
இன்று இரவு டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்திற்கு வந்த பாஜக முக்கிய தலைவர்கள் இந்த மாநிலங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி உடன் தீவிர ஆலோசனை நடத்தினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவர் பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், முதல்வர் பதவிகளை யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் 3 மாநில முதல்வர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 255 இடங்களில் வென்ற பாஜக 41.29 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் 47 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மணிப்பூரிலும் மொத்தம் இருக்கும் 60இல் 32 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்தது. அதேபோல 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவாவில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக 20 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.