போரை நிறுத்த முடியாது சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்தது ரஷ்யா..!

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ரஷ்யா நிராகரித்துள்ளது.

மேலும் உக்ரைன் மீதான போர் தொடருமென அறிவிப்பும் செய்தது. தாம் சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்கப்போவதில்லை எனவும் ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதியன்று தாக்குதலை தொடங்கிய ரஷ்யா  நேற்றைய திகதியில் 22-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் போன்றவை கடுமையான தாக்குதலுக்குள்ளாகி மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன. போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் வலியுறுத்தியும் ரஷ்ய அதிபர் புடின் போரை நிறுத்தவில்லை.

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிடக்கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியது. 

நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் உக்ரைன் போர் தொடர்பான விசாரணை நடைபெற்றது. தற்காப்புக்காகவே ராணுவ நடவடிக்கையை தாம் மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது படையெடுத்துள்ளதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என  சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஜோன் டோனோக் உத்தரவிட்டிருந்தார், 

இந்த உத்தரவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் வரவேற்பைத் தெரிவித்திருந்தன, ஆனால் சர்வதேச நீதிமன்றத்தின் கோரிக்கையை ரஷ்யா ஒருதலைப்பட்சமாக  நிராகரித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த இரு தரப்பு ஒப்புதலும் தேவை எனவும், தாங்கள் இந்த உத்தரவை ஏற்கப்போவதில்லை எனவும் க்ரெம்ளின் செய்தித்தொடர்பாளர் ட்மிட்ரி பெஸ்கோவ் அறிவித்துள்ளார். 

Spread the love