பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இந்தோனோஷியாவின் பாலியில் இடம்பெற்று வருகின்றது. குறித்த அமர்வானது நேற்று முந்தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த அமர்வில் உரையாற்றியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சர்வதேச சமூகத்திற்கு இதுதொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவும் இன்று உரையாற்றியிருந்தார். குறிப்பாக வடக்கு, கிழக்கில் காணப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துடன், மனித உரிமைகளை மதிக்கும் நாடுகள் கைகோர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதன்போது வலியுறுத்தியிருந்தார். அத்துடன், சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திலுள்ள 178 நாடுகளும் இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஜனநாயகத்தினை நிலை நிறுத்துவதற்கும், மனித உரிமைகளை நிலை நிறுத்துவதற்கும் இதை கூடுதலாக முயற்சி எடுக்கவேண்டும் என இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த வருடங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் ஜனாசா எரிப்பு விடயம் தொடர்பாகவும் இரா.சாணக்கியன் இன்று உரையாற்றியிருந்தார்.