இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வது என முக்கிய கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க அனைத்துக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வார் என செய்திகள் தெரிவித்து நிற்கின்றன.
இந்நிலையில், ஜனாதிபதியால் ஒழுங்கு செய்யப்பட்டு அழைக்கப்படும் சர்வகட்சி மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் அத்துடன் அக்கட்சியினால் ஒழுங்கு செய்யப்படும் சர்வகட்சி மாநாட்டினை புறக்கணிக்க உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவும் இந்த சர்வகட்சி மாநாட்டை ஆழுங்கட்சி நடத்த தீர்மானித்துள்ளது என்பதுடன் மாநாடு நாளை 23ம்திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது என்பதும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமை சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அத்தியவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான மனவிரக்தி நிலை தோற்றம் பெற்று காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.