உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்கவேண்டும் என மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக அறிக்கையொன்றை வெளியிட்டுவைத்த அவர்கள் இந்த கோரிக்கையினையும் முன்வைத்துள்ளர்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- இறைமையுடன் ஜனநாயகத்தையும் தனக்குள் கொண்ட நாடான உக்ரைன் மீதான ரஸ்யாவின் தூண்டப்படாத தான்தோன்றித்தனமான நியாயமற்ற சட்டவிரோத படையெடுப்பை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த மூர்க்கத்தனமான தாக்குதல் ஐ.நா சாசனம் உட்பட மனிதாபிமான சர்வதேச பட்டயங்களையும் நியாயமான போர்முறைக்கு முற்றிலும் மாறுபாடான செயலாகும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் முறையானது அந்நாட்டில் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதை மானிட உலகமானது அச்சத்துடன் பார்த்தவண்ணமுள்ளது. ரஷ்யா பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது போர் விதிமுறைகளை மீறி மக்கள் குடியிருப்புக்கள் பொது மக்கள் கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதன் காரணமாக பொதுமக்களிற்கும் பொதுச்சொத்துக்களுக்கும் பெரும் நாசமும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள், முதியர்வர்கள் உட்பட பல மில்லியன் கணக்கான மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாகவும் புகலிடம் தேடியும் யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேறி தப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 70 வருடங்களில் இல்லாதவாறான மிக அதிவேகமாக அகதிகள் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ரஷ்யாவின் படையெடுப்பு என்பது அமைதியான இறைமையுள்ள ஓர் நாட்டின் மீதான நியாயமற்ற முறையற்ற சண்டித்தனம் மிக்க நடவடிக்கையாகும். இதன்மூலம் உலகில் சமாதானம், அமைதி என்பவற்றை அடித்தளமாகக்கொண்ட ஒருங்கிணைந்த இறைமை அமைதி என்பன கொண்ட ஒரு நாட்டுக்கு ரஷ்யா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கியநாடுகள் சாசனம் கடந்த காலங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுதான், ஆனால் அது அமைதி பாதுகாப்பு அபிவிருத்தி நீதி சர்வதேச சட்டங்கள் என்பவற்றினை மீறாமலும் மனித உரிமைகளின் பக்கம் தனது உறுதிப்பாட்டை நிலை நிறுத்தியுள்ளது என்று அவர்கள் தமது கோரிக்கையில் தமது கருத்துக்களை உறுதிபடவும் தெளிவாகவும் கூறியிருந்தனர்.