சர்வ கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்வோர் விபரம்

அனைத்து கட்சிகள் மாநாடு இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் முன்னமே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் அரசாங்கத்திடம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

அவ்வாறான கட்சிகளின் ஒன்றித்த கருத்தினைக்கேட்டறிந்து நாட்டின் தற்போதைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பது பற்றிய அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிவதற்காக ஜனாதிபதி இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டியுள்ளார். ஆனால் எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகளும் மற்றும் பிற கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அதாவது ஐக்கிய மக்கள் சக்தி, ஜாதிக ஜன பலவேகய, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஜனநாயக ஜனதா பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனைத்துக்கட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. எவ்வாறாயினும், இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட 11 அரசாங்கப் பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதான மற்றும் வண.அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்துக் கட்சி மாநாட்டில் தாங்களும் கலந்து கொள்வதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என இலங்கை மக்கள் காங்கிரஸும் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Spread the love