உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாகட்சியானது பலம் பொருந்திய கட்சியாக மாபெரும் வெற்றிபெற்று நின்றதை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள், மூத்த பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் (25ம்திகதி) இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
அவருக்கு மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரே நபர் முதல்வராக பதவியில் அமர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் 60 தொழில் அதிபர்கள் போன்றோருக்கான கெளரவத்தையும் கொடுக்கும் நிகழ்வாக அது காணப்பட்டது. யோகா குரு ராம்தேவ், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் நடிகர் அனுபம் கெர் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
முக்கிய சிறப்பு விருந்தினர்கள் விழாவில் கலந்து கொள்வதால் பாதுகாப்பு பணிகளுக்காக இந்நிகழ்ச்சியில் சுமார் 8,000 போலீசார் குவிக்கப்பட்டனர். முதல்வர் யோகிக்கு பிறகு, 2 துணை முதல்வர்களுக்கும் ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இம்முறை கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.