இலங்கைத் தமிழர்களுக்கு சீனா உதவுவதனால், இந்தியாவிற்குச் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீனத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கிசென் ஹொங் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
மீனவர்களுக்கு 75 இலட்சம் ரூபாவிற்கும் கூடுதலான உதவிகளை அவர் வழங்கியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் அழிவிற்கு காரணமான போருக்கு அனைத்து வகைகளிலும் சீன அரசாங்கமே, உதவியது. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தனக்கு நற்பெயரை ஏற்படுத்தி, இலங்கையின் வடக்கு பகுதியிலும் கால் பதிக்க வேண்டுமென்பதுடன், இந்தியாவிற்கு நெருக்கடி தரவேண்டும் என்பதே, சீனாவின் நோக்கம். ஆகவே, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை செய்ய வேண்டுமெனவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.