கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிலருடன் இன்று ரோம் நகருக்கு பயணித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரை சந்திப்பதற்காக இவர்கள் பயணித்துள்ளனர். கொழும்பு பேராயருடன் பாதிக்கப்பட்ட 60 பேர் சென்றுள்ளனர்.
பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில், பாதிக்கப்பட்டவர்களுடன், கொழும்பு பேராயர் ரோம் புறப்பட்டு செல்வதாக, பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ அடிகளார் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு மூன்று வருடங்களாக கோரி வரும் நிலையில், எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். காலம் கடக்கையில் சம்பவத்தை மறந்து அது தொடர்பான போராட்டங்கள் கைவிடப்படும் என்ற எண்ணத்தில் நாட்டுத் தலைவர்கள் செயற்பட்டாலும், நீதி நிலைநாட்டப்படும்வரை தங்களின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ அடிகளார் தெரிவித்துள்ளார்.