ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த சிறிதம்ம தேரர் சுகவீனம்

நாட்டு மக்களுக்கான வாழ்வியல் சுதந்திரத்தைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பபட்டு வரும் தன்னெழுச்சி போராட்டக்களத்தில், சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்த தெரிபெஹே சிறிதம்ம தேரர் சுகவீனமுற்றுள்ளார்.

ரத்துபஸ்வல நீருக்கான போராட்டத்தின் போது முக்கிய பங்காற்றிய தெரிபெஹே சிறிதம்ம தேரர்  காலிமுகத்திடலின் போராட்டக்களத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் சுகவீனமடைந்ததையடுத்து, இன்று காலை அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, காலி முகத்திடலில் உள்ள போராட்டக்களத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தெரிபெஹெ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையால், மாத்தறை விமலதேவ தேரரும், மாலபே சீலரத்ன தேரரும் போராட்ட பூமிக்கு சென்று உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் கடந்த 15 ஆம் திகதி முதல் போராட்டக்களத்தில் ஆரம்பித்த சத்தியாகிரகத்தில் கலைஞர்கள் , விளையாட்டு வீரர்கள் , மதத்தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

இசைக்கலைஞர் ஹர்ஷ மாகலந்த இன்று காலை தனது சத்தியாகிரகத்தை முடிவிற்கு கொண்டுவந்தார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டம் 14 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. பெருந்திரளானவர்கள் அங்கு சென்று அரசாங்கத்திற்கு எதிரான தமது கருத்துகளை முன்வைத்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Spread the love