தமது இலங்கைக்கான பயணத்தின்போது பல மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து கவனத்தை ஈர்க்க முடிந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் விடயங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா கூறியுள்ளார்.
இலங்கைக்கான பயணத்தை நேற்றைய தினம் முடித்துக்கொண்ட நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகத்தில் உள்ள சிலர் இலங்கையின் அவசர மனித உரிமைகள் சவால்களை கண்டுகொள்ளாத நிலையில், பாதிக்கப்பட்ட சமூகங்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான தமது பணிகளுக்கு மேலும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் விடயங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா கூறியுள்ளார். நாடு முழுவதிலும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களில் பலரை கடந்த சில நாட்களாக சந்தித்து கவலையை கேட்கமுடிந்தது.
இந்தநிலையில் அமைதியான ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் தொடர்ந்தும் சர்வதேச மன்னிப்புசபை பணியாற்றும். அதேநேரம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீண்ட கால கோரிக்கையான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை பெற்றுத்தருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசரமாகவும் உண்மையாகவும் செயற்படவேண்டும் என்றும் டிப்ரோஸ் முச்செனா கோரியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்துடன் எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்துடன் பிணையெடுப்புப் பொதியானது குறைந்தபட்ச சர்வதேச மனித உரிமைத் தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அத்துடன் பிணை எடுப்பு முடிவோடு இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகள், நிபந்தனைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றும் தாம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் விடயங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.