அத்துமீறி நுழையும் சீனா, நேபாளம் ஐ.நா விடம் புகார்..!

நேபாளத்தின் எல்லைக்குள் சீனாவானது அத்துமீறி நுழைவதாக செப்டம்பர் 2021ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட நேபாள அரசாங்க அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையானது அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்ற போதும் அது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

நேபாளத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஹம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறி நுழைவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேபாள எல்லை பொலிஸாரை சீனப் படைகள் அச்சுறுத்தியதாகக் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சீன பாதுகாப்புப்படைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளானவை லாலுங்ஜோங் என்ற இடத்திலுள்ள எல்லையில் காணப்படும் நேபாளப் பகுதியில் மத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும், அத்துடன் நேபாள விவசாயிகளின் கால்நடைகளினது மேய்ச்சலை சீனா கட்டுப்படுத்தி வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், சீனா எல்லைத் தூணைச் சுற்றி வேலி அமைத்ததுடன் நேபாள எல்லையில் கால்வாய் மற்றும் வீதிகளை அமைக்க முயற்சித்து வருவதாகவும் எனவே நேபாளத்தின் பாதுகாப்பை அதிகரிக்க நேபாள பாதுகாப்புப் படைகளை அப்பகுதியில் நிறுத்துமாறும் அறிக்கை பரிந்துரைத்தது.

சீனாவின் நில அபகரிப்பு தந்திரங்களை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஷ்ட்ரிய ஏக்தா அபியான் தலைவர் பினய் யாதவ், காத்மாண்டுவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நேபாளத்தில் சீனாவின் அத்துமீறல் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், சீனாவின் விரிவாக்க நோக்கங்களுக்கு எதிராக காத்மாண்டுவில் போராட்டங்கள் நடந்தன. எவ்வாறாயினும், நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இதுபோன்ற செய்திகளை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love