உக்ரைனுடனான போருக்கு அமெரிக்கா தம்மை தள்ள முயற்சிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சுமத்தியுள்ளார். ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்காக மோதலை ஒரு காரணியாக பயன்படுத்துவதே அமெரிக்காவின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவின் நேட்டோ கூட்டணி தொடர்பில் ரஷ்யாவின் அதிருப்தி நிலைப்பாட்டையும் அமெரிக்கா புறக்கணித்து வருவதாக அவர் கூறியுள்ளார். உக்ரைன் எல்லைகளில் ரஷ்ய படையினரின் குவிப்பு தொடர்பில் பதற்றம் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.
உக்ரைனின் தெற்கு க்ரைமியா தீவகத்தை தம்முடன் ரஷ்யா இணைத்துக்கொண்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு பிராந்தியத்துடன் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக சர்வதேச ஒப்பந்தமொன்றை அமுல்படுத்த உக்ரைன் அரசாங்கம் தவறியுள்ளதாக மொஸ்கோ குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.