தாதியர் சங்க பகிஷ்கரிப்புக்கு இடைக்கால தடையுத்தரவு

அரச தாதியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராக, மேற்படி சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு நீதிமன்றத்திடம் உத்தரவு பிறப்பிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார் சட்டமா அதிபர். சட்டமாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்ரூ நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, கொழும்பு நீதவான் அருண அளுத்கே இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ சேவைகள், மேலதிக வைத்திய சேவை உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தில் பாரிய முரண்பாடு உருவாகியுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. சம்பள முரண்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் பயிற்சிபெறாத ஆசிரியர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம் தொழில்சார் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த தாதியரின் சம்பளத்தைவிடவும் அதிகரித்திருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாரித்துள்ள சம்பளம் தொடர்பிலான வரைபை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

source from newsfirst
Spread the love