சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திரு. அனுபா பஸ்குவால் நேற்று (02) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு நண்பகல் 12.00 மணியளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.மு.முபாரக் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தற்போது அமுல்படுத்தப்படவுள்ள சமூக நலன்புரித் திட்டத்தின் நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்தார். 44 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 23901 குடும்பங்கள் சமுர்த்தியினைப் பெற்றிருந்தார்கள். ஆனால் தற்பொழுது அமுல்படுத்தப்படவுள்ள சமூக நலன்புரி திட்டத்திலே 16211 குடும்பங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் தெளிவாக பதில் மாவட்ட அரசாங்க அதிபரினால் எடுத்துக்கூறப்பட்டது.
உண்மையில் பலர் நலன்புரித்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டியவர்கள் தெரிவாகவில்லை என்பதனை எடுத்துரைத்தார்.
இதன்போது பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஆட்சேபனை விடயத்தை அனைவரும் தெரிவிக்க முடியும் இதன் பின்னர் முழுமையான தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். இவற்றுக்கு மேலாக முல்லைத்தீவு மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பான விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு தற்போது நலன்புரித்திட்டத்தில் விடுபடுபவர்களை சமூக வலுவூட்டல் செயற்பாடுபற்றியும் ஆராயப்பட்டது. இதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் பொருட்டு ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் 50 ஏக்கர் வீதம் கைத்தொழில் பகுதிகளுக்கென ஒதுக்கப்பட்டு மக்களுக்கான தொழில் வாய்ப்புப் பற்றியும் கேட்டறியப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், நிர்வாக சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.