ஒரு வருடத்திற்கு 2 ஐ.பி.எல், தொடர்களை நடத்தவேண்டும் என்ற ஆலோசனைகள் சூடுபிடித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். 15 ஆவது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக சீசனிலேயே கிண்ணத்தை வென்று அசத்தியது.
2 மாதங்களாக திருவிழாவைப் போன்று ரசித்து வந்த ரசிகர்கள் இனி அடுத்த ஐ.பி.எல். எப்போது என காத்துள்ளனர். இந்நிலையில் இனி வருடத்திற்கு 2 ஐ.பி. எல். தொடர்களை நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா, டேனியல் விட்டோரி, இயன் பிஷப் உள்ளிட்டோர் முன்வைத்துள்ளனர்.
சர்வதேச ரி-20 போட்டிகளில் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் ஆடும்போது சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடுகையில், அதிரடிகள் நிறைந்த ரி -20 போட்டிகளில் தொடக்கத்திலேயே ஒரு அணிக்கு சார்பாக வெற்றி சென்றுவிடுகிறது. எனவே சர்வதேச ரி-20களை குறைத்து விட்டு ஐ.பி.எல்.ஐ அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ரவிசாஸ்திரி, இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தபோது தரமில்லாத ரி-20 போட்டிகள் நடப்பதை நேரடியாகப் பார்த்தேன். எனவே கால்பந்தாட்டத்தை போல உலகக் கிண்ணத்தில் மட்டும் சர்வதேச ரி-20 போட்டிகளை வைத்துவிட்டு, ஐ.பி. எல். போன்ற உள்நாட்டுத் தொடர்களை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் உலகக்கிண்ணத்தைத் தவிரமற்ற சர்வதேச ரி-20 போட்டிகளை ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளமாட்டார்கள். இதற்கு, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் ஆதரவளித்துப்பேசியுள்ளார். அதில், ஒரு வருடத்தில் 2 ஐ.பி.எல். என்ற முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அது வெகு தொலைவில் இல்லை எனக் கூறியுள்ளார். பி.சி.சி.ஐ.யும் வருமானம் அதிகரிப்பதை மனதில் வைத்து இது குறித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.