ஆய்வுக் கப்பலை காலம் தாழ்த்துமாறு சீனாவிடம் கோரியுள்ள இலங்கை

சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதைக் காலந்தாழ்த்துமாறு சீனாவிடம் இலங்கை கோரியுள்ளதை வௌிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலும் தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இந்தியா இந்தக் கப்பலை உளவு பார்க்கும் கப்பலாக நோக்கும் அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தக் கப்பல் வந்தடைந்தால் தமது 02 அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களும் ஆபத்தை எதிர்நோக்குமென சுட்டிக்காட்டியுள்ளது.

தமது கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை சேகரிப்பதற்கான இயலுமையும் குறித்த கப்பலிடம் உள்ளதாக இந்தியா தெரிவிக்கின்றது.

இந்தக் கப்பலுக்கான எரிபொருள் மற்றும் உணவை மீள் நிரப்பும் நோக்குடன் ஹம்பாந்தோட்டைக்கு வருகைதருவதற்கான வாய்மொழி மூல அனுமதியை ஜூலை மாதம் 12 ஆம் திகதியன்று இலங்கை வௌிவிவகார அமைச்சு, சீனத் தூதரகத்திற்கு வழங்கியதாக கொழும்பு இராஜதந்திர கேந்திர நிலையமொன்றை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது. 

இந்த வேண்டுகோள் சீனாவின் பலத்தை விடவும் அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு மதிப்பளிப்பதாக உள்ளதென ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கின்றது.

Spread the love