இராணுவம் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

வன்முறைகளில் ஈடுபடும் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என்று இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வன்முறைகளை தூண்டி பொதுச் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் செயற்படும் போராட்டக்காரர்களை அந்தச் செயற்பாடுகளில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளுமாறும், இல்லையேல் பொதுச் சொத்துக்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு தேவை என கருதினால், அவைகளை பாதுகாக்கும் பொருட்டு, ஆயுதப் படை உறுப்பினர்கள் தங்கள் பலத்தினை பிரயோகிக்க சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தலைமையகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை யொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், ஆயுதப்படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்துவதற்கும், நாட்டு மக்கள், பொதுச் சொத்துக்கள் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜுலை 9 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இடம் பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சில வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்பட்டதைத் தவிர, சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் போதும் மற்றும் அதனை மீறல் தொடர்பான குறிப்பிடத்தக்க வன்முறைச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை . இதேவேளை அனைத்து சொத்துக்களையும் சேதப்படுத்தாமல் அதனை பாதுகாக்குமாறும் அனைத்து பிரச்சினைகளையும் அரசியலமைப்பு ரீதியாக தீர்க்கு மாறும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் மூன்று தடவைகளுக்கு மேல் போராட்டக்காரர்களிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், வன்முறைச் செயல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆயுதப் படைகள் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் உள்ள போராட்டக்காரர்களை அனைத்து வகையான வன்முறைகளில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், பொதுச் சொத்துக்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு தேவை என கருதினால், அவைகளை பாதுகாக்கும் பொருட்டு, ஆயுதப்படை உறுப்பினர்கள் தங்கள் பலத்தினை பிரயோகிக்க சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love