இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் எமக்கு உத்வேகம்-அலிசப்ரி 

இலங்கை எதிர்கொண்டு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சவால்கள், இலங்கையில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இலங்கையின் புதிய அரசு நிதி ஒழுக்கம், பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தம் விடயத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் கருத்து சுதந்திரத்தையும் அங்கீகரிக்கின்றது. அதேவேளையில் அது அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மேலும் கூறுகையில், இறுதியாக இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்விற்குப் பின்னரான காலத்தில் இலங்கையில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு தற்போது உள்ளக மற்றும்சர்வதேச ரீதியில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள சவால்களை மக்களது நலன்களுக்கும் தேவையான புதிய அரசியல் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிகைகளுக்குமான வாய்ப்பாகவும் முன்னெடுக்க முடிந்துள்ளது.

எதிர்காலம் தொடர்பில் எமது பொதுவான இலக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான சிறந்த தருணமாகவும் இலங்கை நம்புகிறது. அனைத்து இலங்கையர்களுக்காகவும் நீதியான, நிலையான மற்றும் ஒருமைப்பாட்டுடனான எதிர்காலத்தை சிறப்பான வகையில் மீளக் கட்டியெழுப்புவதற்கும் இது சிறந்த வாய்ப்பாகும். எமது இந்த ஆரம்பத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் உதவிகளை இலங்கை எதிர்பார்க்கின்றது. நாட்டின் தொடர்ச்சியாக நிலவிய சமூக அமைதியின்மை மற்றும் எதிர்ப்புகளின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பாராளுமன்றத்தில் முதலாவது உரையையாற்றினார்.

அதில், நாடு எதிர்பார்க்கும் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்பை தாம் முன்னெடுப்பதாக அவர் அதன்போது தெரிவித்தார். அந்த நடவடிக்கைகளுக்காக தற்போது முன்னெடுக்கப்படும் முறைமைகள் மீளாய்வுகள் ஜனநாயக நிறுவன கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்குமானது என்பதுடன் அதற்கான நடவடிக்கைககள் முன்னெடுப்பது தொடர்பில் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை சிறந்த நிதி மற்றும் நீண்ட கால பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான மறுசீர்மைப்பின் மூலம் மட்டுமே முன்னெடுக்க முடியுமென்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எவ்வாறெனினும் அந்த வேலைத்திட்டம் தொடர்பில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். உத்தேச அரசியலமைப்பு மற்றும் நிறைவேற்றுத்துறை திருத்தங்களின் மூலம் சுயாதீன மற்றும் மக்கள் மதிப்பீட்டுக்கு உள்ளாகும் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கட்டியெழுப்பி இந்த நிலைமையை பலப்படுத்த முடியுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் நாம் உணர்ந்துள்ள அதேவேளை எமது மக்கள் முகங்கொடுத்துள்ள சமூக பொருளாதார கஷ்டங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது கவலையைத் தெரிவிக்கின்றது . சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட அதிகாரிகளுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். சமூக அவதானத்திற்குஉட்படும் பகுதிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பின் மூலம் மக்களது வாழ்க்கையின் அழுத்தங்களை உச்சளவில் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

2030 ஆம் ஆண்டில் உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரலாம். அதற்கிணங்க உணவு மற்றும் போஷணைகள் பாதுகாப்புத் தொடர்பில் பாரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை அது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன் அதுதொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நிலையான அபிவிருத்தியின் மூலம் விவசாயத்தை நவீனமயப்படுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை ஒத்துழைப்பை வழங்கும்.அனைவருக்கும் சிறந்த கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவது இலங்கையின் சமூக பாதுகாப்புக் கொள்கையில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் கல்வியைப் பெற்றுக்கொடுப்பதும் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவதும் இலங்கையின் இலக்காகும். இந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. தற்போதைய நெருக்கடியை வாய்ப்பாக்கிக்கொண்டு மீண்டும் எழுவதற்கும் சுதந்திரம் மற்றும் சௌபாக்கியத்தை உருவாக்குவதற்கும் செயற்படுவோம் என்றார்.

Spread the love