எரிபொருள் விற்பனையின் மூலம் தொடர்ந்தும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து வருவதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தின் பின்னரும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துக்கு 1613 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்வனவு செய்யும் விலையைக் காட்டிலும் விற்பனை செய்யும் விலையில் நிவாரணம் வழங்கப்படுகின்றமை காரணமாகவே இந்த நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விலை சீர்திருத்தத்தின் பின்னர் குறிப்பாக மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவேண்டியுள்ளபோதும் 84 ரூபாவுக்கே பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை நாட்டில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லையென்றும் டீசல் விநியோகத்தில் தடங்கல் உள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.