இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான 3வது இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாடு

இலங்கை மத்திய வங்கி – ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் – ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக 2022 செத்தெம்பர் 23ஆம் திகதியன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து இலங்கை மத்திய வங்கி அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருளானது கடந்த ஆண்டினைப் போன்று ‘பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள்’ தொடர்பில் அமைந்திருந்தது.

மாநாட்டினை ஆரம்பித்துவைத்த மத்திய வங்கி ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் என்பவற்றினால் முக்கியமாக உந்தப்பட்டு, அநேகமான மத்திய வங்கிகள் அவற்றுடன் தொடர்புடைய பொருளாதாரங்களை உறுதிப்படுத்துவதனை முன்னுரிமைப்படுத்துவதற்குத் தூண்டுதலளித்த உலகெங்கிலுமுள்ள பல நாடுகளினால் எதிர்கொள்ளப்பட்ட சில முக்கிய சவால்களை விவரித்துக் கூறினார்.

பேரண்டப்பொருளாதார தாங்கியிருப்புக்களின் மாறுபடுகின்ற மட்டங்களுக்கு மத்தியில் ஒருபுறம் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் மற்றும் மறுபுறம் ஒட்டுமொத்த பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினைப் பேணுதல் என்பவற்றிற்கிடையில் சமநிலைத்தன்மையினைப் பேணுவதில் முன்னேற்றங்கண்ட மற்றும் தோற்றம் பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள் ஆகிய இரண்டும் எதிர்கொண்ட அதிகரித்துவரும் கரிசனைகளை அவர் எடுத்துக்காட்டினார்.

உலகளாவிய பொருளாதார அமைப்பு முறைகளில் நிலவுகின்ற உயர்ந்தளவிலான தளம்பல் நிலைக்கு மத்தியில் பொருளாதாரங்களினால் எதிர்கொள்ளப்பட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குக் கல்வியலாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஆய்வுக் கூட்டிணைப்பின் முக்கியத்துவத்தினையும் அவர் குறித்துக்காட்டினார். இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமைகளுக்கு மத்தியில் கோட்பாட்டுக் கல்வியல்சார் ஆராய்ச்சியில் முன்வைக்கப்படுகின்ற சில மாதிரிகள் மற்றும் கோட்பாடுகளது கண்டறிகைகளின் பிரயோகத்தன்மை மற்றும் ஏற்புடைமை என்பன ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்பட்டாலும், தோற்றம் பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களின் இயக்கவாற்றலினை ஆராய்வதற்கு முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகள் மீட்புச் செயன்முறையில் அத்தியாவசியமானதொரு கூறென ஆளுநர் எடுத்துக்காட்டினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையத்தின் பீடாதிபதி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் டெட்ஷ_சி சோனோபி தொடக்க உரையை வழங்கி, பணவீக்க அழுத்தங்களின் வெளிப்பாடு, கிடைப்பனவாயுள்ள கொள்கைசார் இடைவெளி மற்றும் பேரண்ட அடிப்படைகளின் ஆற்றல்வாய்ந்ததன்மை என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு பிராந்தியங்களுக்கிடையிலான பன்முகத்தன்மையைக் குறிப்பிட்டார். கல்வியலாளர்கள் மற்றும் கொள்கைவகுப்பாளர்;களிடையே உரையாடலொன்றினைத் தூண்டுவதற்கும் கொள்கை ஆராய்ச்சியின் மேலதிக அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தன்மையிலமைந்த பயிற்சிப்பட்டறைகள் துணைபுரியுமென அவர் வலியுறுத்தினார்.

Spread the love