நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அதேவேளை, ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை புதன்கிழமை இடம்பெற்றது. இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் இன்று தொழில்நுட்ப கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு கடந்த செவ்வாயன்று நாட்டை வந்தடைந்தது. எதிர்கால IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் மீது பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதற்கு முன்னேற்றம் காண்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இம்மாதம் 31 ஆம் திகதி வரை குறித்த குழுவினர் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.