இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பெடரல் பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்தார். இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கசாண்ட்ரா பெர்னாண்டோவின் அரசியல் வாழ்வு குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.
இரு நாடுகளினதும் பாராளுமன்ற முறைமை தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கசாண்ட்ரா பெர்னாண்டோ 1987 இல் இலங்கையில் பிறந்து 1999 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி சார்பில் விக்டோரியா பிராந்தியத்தில் ‘ஹோல்ட்’ தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2022 பெடரல் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதலாவது அரசியல் பிரதிநிதியாவார்.
கசாண்ட்ரா பெர்னாண்டோ அரசியலுக்குப் பிரவேசிக்க முன்னர் அவுஸ்திரேலிய பல்தேசிய நிதி நிறுவனமான வூல் வர்த்ஸ் நிறுவனத்தின் சமையல்காரராக (Chef) 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார். கசாண்ட்ரா பெர்னாண்டோவுக்கு இலங்கை பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.