இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தம் 

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. விமானங்களுக்கான எரிபொருள் நிறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவண்சந்ர தெரிவித்துள்ளார்.

எனவே முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருளே கையிருப்பில் உள்ளமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் என்பவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தேவையான விமான எரிபொருளை பெற்று தருவதற்கு கனியவள கூட்டுதாபனம் இதன்போது இணங்கியதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவண்சந்ர தெரிவித்தார்.

இந்நிலையிலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ருவண்சந்ர தெரிவித்தார். இதே வேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளை குறைப்பதற்கு சில விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love