வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை விருத்தி செய்யும் முகமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்குச் செல்லவுள்ளார். அங்கு அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கவிருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் அமைச்சர் ஜி எல் பீரிஸ் மற்றும் இந்திய அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இருவரும் நியூயோர்க்கில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ, தற்போது இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
கடந்த ஜனவரி 15 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இலங்கை நிதி அமைச்சரும், மெய்நிகர் சந்திப்பொன்றை நடத்திஇருந்தனர். அப்போதைய சந்திப்பின் முடிவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “இந்தியா எப்போதும் இலங்கைகுத் துணை நின்றிருக்கிறது. அது தொடர்ந்தும் தனது ஆதரவை (இலங்கைக்கு) வழங்கும்” தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.