இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளன.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் 2000 வீட்டு அலகுகள் இதற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் ஊட்டச்சத்து நிலை குறித்த கணக்கெடுப்பு இறுதியாக 2016 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது.
கடந்த காலங்களில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடு மூடப்பட்டதுடன், நாட்டு மக்களின் போஷாக்கு நிலை தொடர்பில் அதிக மாற்றம் ஏற்பட்டமை தெரியவந்தது.
குறிப்பாக நகர மற்றும் தோட்டப்புற வீடுகளில் வாழும் சிறுவர்களினதும் பெரியவர்களினதும் போசாக்கு மட்டம் தொடர்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தமை, சுகாதார அமைச்சினால் இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.
இதனிடையே, தெற்காசியாவில் குறைந்த நிறையுடைய சிறுவர்கள் அதிகளவில் வாழும் நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.