உக்ரைன் – ரஷ்யா முறுகல். எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையில் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக மணி நேரத்துக்கும் அதிகமாக இருவரும் உரையாடியதாக வெள்ளை மாளிகையினை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவித்து வைத்திருப்பது குறித்து பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

படைகளை உடனடியாக திரும்ப பெறுமாறும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு அவர் கோரிக்கை விடுத்ததுடன், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அதிகமாக மனித உயிர் இழப்புகள் ஏற்படும் என்று பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியான பதிலடி கொடுக்கும், இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ரஷ்ய ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுவும் தெரியவில்லை என அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக் கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love