ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகொன், ஹேவோர்ட் பார்க் விளையாட்டரங்கில் ஜூலை 15 ஆம் திகதியிலிருந்து ஜூலை 24 ஆம் திகதிவரை நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் 3 உலக சாதனைகள் நிலைதாட்டப்பட்டன. பெண்கள் பிரிவில் 2 உலக சாதனைகளும் ஆண்கள் பிரிவில் ஒரு உலக சாதனையும் நிலைநாட்டப்பட்டன.
ஓரிகொன் 2022 உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் பதக்கங்கள் நிலையில் ஐக்கிய அமெரிக்கா 13 தங்கப்பதக்கங்களுடன் முதலாம் இடத்தைப் பெற்றது. பெண்களுக்கான 100 மீற்றர் சட்ட வேலி ஓட்ட அரை இறுதிப் போட்டியை 12.12 செக்கன்களில் நிறைவுசெய்த தன் மூலம் நைஜீரிய வீராங்கனை டோபி அமுசான் புதிய உலக சாதனை நிலை நாட்டினார். அதன் பின்னர் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டியை 12.06 செக்கன்களில் நிறைவு செய்த டோபி அமுசான் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இருப்பினும் அவர் பதிவு செய்த 12.06 செக்கன்கள் உலக சாதனையாக கருத்தில் கொள்ளப்படவில்லை. ஏனேனில் 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியின்போது நேர்த்திசை காற்றின் வேகம் மணிக்கு 2.5 கிலோ மீற்றராக இருந்ததால் அவரது நேரப்பெறுதி உலக சாதனைக்கு கருத்தில் கொள்ளப்படவில்லை.
இதேவேளை பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப்போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவு செய்த அமெரிக்காவின் சிட்னி மெக்லோலின் புதிய உலக சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். ஒரு மாதத்திற்கு முன்னர் இதே அரங்கில் நிலைநாட்டப்பட்ட தனது சொந்த சாதனையான 51.46 செக்கன்கள் என்ற உலக சாதனையை மெக்லோலின் முறியடித்தே புதிய உலக சாதனையை நிலைநாட்டினார். உலக மெய்வல்லுநர் அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தொடர்ந்து சாதனைகளை நிலைநாட்டி வரும் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்காக கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 6.21 மீற்றர் உயரம் தாவிய ஆர்மண்ட் டுப்லான்டிஸ் தனது முந்தைய சொந்த சாதனையான 6.20 மீற்றர் உயரத்தை முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார்.
செர்பியாவில் இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளக மெய்வல்லுநர் கோலூன்றிப் பாய்தல் போட்டியிலேயே டுப்லான்டிஸ் 6.20 மீற்றர் உயரம் தாவி உலக சாதனை நிலைநாட்டிய இருந்தார். ஒரிகொன் 2022 உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய மூவரும் முதல் சுற்றுகளுடன் வெளியேறினர். ஆண்களுக்கான 100 மீற்றர் திறன் காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் யுப்புன் அபேகோன் (10.19 செக்.) ஒட்டுமொத்த நிலையில் 30ஆவது இடத்தைப் பெற்று வெளியேறினார். பெண்களுக்கான 3,000 மீற்றர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை நிலானி ரட்நாயக்க (9:54.10) ஒட்டு மொத்த நிலையில் 39ஆவது இடத்தைப் பெற்றார். பெண்களுக்கான 800 மீற்றர் திறன் காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் கயன்திகா அபேரட்ன (2:02.35) ஒட்டுமொத்த நிலையில் 29ஆவது இடத்தைப் பெற்றார்.
ஒரிகொன் 2022 உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 33 பதக்கங்களை வென்று முதலாம் இடத்தைப் பெற்றது. எதியோப்பியா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் 2ஆம் இடத்தையும் ஜெமெய்க்கா 2 தங்கம், 7 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன.