எலிஸபெத் மகாராணியின் செய்தி தாங்கிய கோலுக்கு பெரும் வரவேற்பு

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோலுக்கு இலங்கையில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் மகாராணியின் செய்தி தாங்கிய கோல், மாலைதீவுகளிலிருந்து திங்கட்கிழமை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.


பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்டன், இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கத்தின் தலைவரும் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவருமான சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா உள்ளிட்ட பிரமுகர்கள் மகாராணி கோலை வரவேற்றனர். பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்ற சின்தன விதானகே, டினுஷாஹன்சனி கோமஸ் ஆகியோர் மகாராணி கோலை ஏந்தியவாறு வாகன பவனியில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து சமகால மற்றும் முன்னாள் மெய்வல்லுநர்கள் மகாராணியின் கோலை நடைபவணியாக ஒலிம்பிக் இல்லத்தில் உள்ள இலங்கை பொதுநல வாய விளையாட்டுத்துறை சங்கத்துக்கு கொண்டு சென்று சுரேஷ் சுப்ரமணியம், மெக்ஸ்வெல் டி சில்வா, காமினி ஜயசிங்க ஆகியோரால் பொறுப்பேற்கப்பட்டது. பிரித்தானிய தூதரகத்துக்கும் கொண்டு செல்லப்பட்ட மகாராணி கோல், பிரித்தானிய அரசின் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கும் பின்னர் ரனபிம கல்லூரிக்கும் நேற்று கொண்டு செல்லப்பட்டது. இன்று புதன்கிழமை காலை பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தேயிலை தொழிற்சாலைக்கு மகாராணி கோல் கொண்டுசெல்லப்படும்.

Spread the love