ஐ.எம்.எப். எதிர்பார்க்கும் கடன் வழங்குநரின் நிதி உத்தரவாதம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும்

க.பிரசன்னா எதிர்வரும் வியாழக்கிழமை 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியத்தினால் (ஐ.எம்.எப்.) எதிர்பார்க்கப்படும் கடன் வழங்குநரின் நிதி உத்தரவாதம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படுமென நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்பில் நாட்டுக்கு உதவ வாய் மொழியாக இணங்கிய போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு சரியான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சரியான நிதி உத்தரவாதம் தேவை எனவும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை விரைவில் பெற முயற்சித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதில் பாராளுமன்றத்தை புறக்கணிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட ஒப்பந்தம் பொது நிதிக்குழுவில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக ஏனைய உத்தியோகபூர்வ குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுக்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தம் பகிரப்பட்டதா என ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்ததுடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது பாரிய மீறல் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் எந்தவொரு முறையான அனுமதியையும் பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் நிலை ஒப்பந்தம் ஒரு ஆவணம் அல்ல, ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு என்றும் தெரிவித்தார். ஊழியர் நிலை ஒப்பந்தம் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதை இது அர்த்தப்படுத்துவதில்லை . இந்த புரிதலின் கூறுகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் செய்திக் குறிப்பு ஏற்கனவே பொது களத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Spread the love