ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 46/11 தீர்மானம் இலங்கை வாழ்மக்களுக்கு அர்த்தமற்றது என்பதை நாம் மீண்டும் நினைவுபடுத்துகின்றோம். அந்தத் தீர்மானத்தின்மூலம் இலங்கையில் சமூகங்கள் பிளவுபட்டு பொருளாதாரம், அமைதி, நல்லிணக்கம் என்பவை சவாலுக்குட்படுத்தப்படும். இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜெனிவாவில் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை தொடர்பாக நாளை ஆராயப்படவுள்ளது. இந்தநிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது மோதலின் பின்னர் நிலைமையை சீர் செய்வதற்கு முன்னேற்றகரமான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது. அவற்றை மேலும் முன்நோக்கிக் கொண்டுசெல்ல எதிர்பார்க்கின்றோம். இந்தப் பேரவை ஊடாக முன்வைக்கப்பட்ட 3 மீளாய்வுகளை நிறைவு செய்துள்ளோம். அதற்காக நாம் உள்நாட்டு. சர்வதேசப் பிரதிநிதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடியுள்ளோம். மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு 43 வருடங்களின் பின்னர், அதனைத் திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இவை கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களை கட்டுப்படுத்தாது என்றும் மேலும் சாட்சிகளைச் சேகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட 46/1 தீர்மானம் இலங்கை மக்களுக்குப் பொருத்தமற்றது என்பதை நாம் நினைவுபடுத்துகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இதுவரை 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையும் வகையில் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகின்றது. இந்தப் பின்னணியிலேயே தற்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.