ஐ.பி.எல். போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரபல வீரர் கிரன் பொலார்ட் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர் பொலார்ட். மேலும் ரி-20 கிரிக்கெட்டில் 600 போட்டிகஸில் விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையை சமீபத்தில் படைத்தார்.
2010 முதல் ஐ.பி.எல். மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொலார்ட். 13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய பொலார்ட், 5 முறை ஐ.பி.எல். கிண்ணத்தை மும்பை வெல்ல உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பொலார்ட் தேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது: இந்த முடிவை எடுப்பது சுலபமாக இல்லை. ஏனெனில் இன்னும் சில வருடங்களுக்கு விளையாட நான் தயாராக இருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐ.பி.எல். போட்டியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். என்னால் மும்பை அணிக்குத் தொடர்ந்து விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் விளையாட முடியாது. மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர்தான். எனினும் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன்.
எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக் காகவும் விளையாடவுள்ளேன். நாங்கள் ஒன்றிணைந்து 2011, 2013 இல் சாம்பியன் லீக்கையும் 2013, 2015, 2017, 2019, 2020 ஆண்டுகளில் ஐ.பி.எல். கிண்ணங்களையும் வென்றுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். மும்பை அணியின் பெரியபலமாக இருந்தவர் பொலார்ட். ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்காக 189 ஆட்டங்களில் பொலார்ட் விளையாடியுள்ளார். 16அரைச் சதங்களுடன் 3,412 ஓட்டங்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் – 147.32. 223 சிக்ஸர்கள்.