எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நேற்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபை வர்ந்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதிக விலைக்கு முட்டைகளை எடை அடிப்படையில் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனவரி 20 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்தது, இதன்படி வெள்ளை முட்டை 44 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை 46 ரூபாவாகவும் இருந்தது. எனினும் எடை அடிப்படையில் முட்டையினை விற்பனை செய்வது தொடர்பில் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. ஒரு கிலோ முட்டையில் குறைந்தது 16 – 20 முட்டைகள் இருக்கும்.
எனவே முட்டைகளை எடை அடிப்படையில் வழங்குவது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குமெனவும் தெரிவித்திருந்தது. இதேவேளை கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை எடை அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. முட்டை கிராமுக்கு 80 சதம் என்ற விலையின் அடிப்படையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். இந்திய முட்டைகளை பேக்கரி உற்பத்திக ளுக்கு பயன்படுத்துவதற்காக கிராம் ஒன்று 85 சதம் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதால் உள்ளூர் முட்டைகளை கிராம் 80 சதத்துக்கு பேக்கரிகளுக்கு வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.