இரத்மலானை விமான நிலையத்திற்கான வீதியை மேம்படுத்தும் பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறித்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில், குறித்த விமான நிலையம் தற்போது உள்நாட்டு விமான நிலையமாக இயக்கப்பட்டு வருகிறது.அதனை உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் விமானப்படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கமைய 1. 6 கிலோமீட்டர் நீளமுள்ள குறித்த விமான நிலையத்திற்கான வீதி அபிவிருத்தியை 99.3 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியை தவிர அதன் அருகிலுள்ள நடைபாதைகளை மேம்படுத்த 20.4 மில்லியன் ரூபாயும், தெரு விளக்குகள் பொருத்த 24.8 மில்லியன் ரூபாயும் செலவிடப்படும் என அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.