ஓமிக்ரோன் வகை கொரோனாத் தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அது குறித்து மக்கள் அலட்சியம் கொள்ளக் கூடாது என்றும் பல்வேறு நாடுகளில் ஓமிக்ரோன் பரவல் வேகம் அதிகரித்துள்ளதுடன், உலக அளவில் அத்தொற்று உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
ஒமிக்ரோன் மட்டுமல்லாமல் டெல்டா வகை கொரோனா தொற்றும் தொடர்ந்து பரவிவருகிறது என தெரிவித்துள்ள அவர், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்புடன் செயற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். காற்றோட்டமான இடத்தில் இருத்தல். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டாலும் அத்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.