முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச தற்காலிகமாக தங்கியிருக்க தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து இரண்டு நாட்களில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
ஆட்சிக்காலத்தின் பாதியில் பதவியில் இருந்து விலகிய முதல் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார். இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நாளைய தினம் தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக் செல்ல எண்ணியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்ல உள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக தகவல் எதனையும் வெளியிடவில்லை. அதேவேளை இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் ரட்சேடா தன்னடிரிக்கிடம் (Ratchada Thanadirek) கேட்டுள்ளதுடன் அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.
இலங்கையில் இருந்து சென்ற பின் இதுவரை பகிரங்கமாக வெளியில் தலைக்காட்டாத கோட்டாபய
இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டாபய பகிரங்கமாக வெளியில் வரவில்லை என்பதுடன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை. அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித சிறப்புரிமைகளையும் வழங்கவில்லை என சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
பலமிக்க ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினரான கோட்டாபய ராஜபக்சவுக்கு தற்போது 73 வயது. அவர் இராணுவத்தில் பணியாற்றியதுடன் பாதுகாப்புச் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் நடந்த போர் குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டை கோட்டாபய ராஜபக்ச இதற்கு முன்னர் முற்றாக மறுத்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்திலும் ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டின் பொருளாதாரத்தை தவறான முறையில் கையாண்டதே 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என விமர்சகர்களும், போராட்டகாரர்களும் தெரிவிக்கின்றனர்.
கோட்டாபய ராஜபக்சவின் மூத்த சகோதரர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்ச நாட்டின்ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்தவர். அவரது மற்றைய சகோதரரான பசில் ராஜபக்ச இந்த ஆண்டின் ஆரம்பம் வரை நிதியமைச்சராக பதவி வகித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க என கூறியிருந்தார்.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி வோல்ட் ஸ்ட்ரீட் ஊடகத்திற்கு போட்டியளித்த ரணில் விக்ரமசிங்க, “கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான காலம் இது என நான் நம்பவில்லை” எனக் கூறியிருந்தார்.