சர்ச்சைக்கு முற்று முள்ளி வைத்த சம்பந்தன்!

இரா. சம்பந்தன் பதவி விலக உள்ளதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்ற நிலையில், அவர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப்போவதில்லை.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நாம் நீண்டநாட்களாக முன்வைத்தபோதும், அந்த கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாது இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்துகின்ற போக்கு காணப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்கால சுபீட்சமும் அமைதியும் சுயநிர்ணயமும் உள்ளடக்கிய தீர்வைப்பெறும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

தந்தை செல்வா என்னை அரசியலுக்கு வரும்படி அழைத்தபோது நான் மூன்றுமுறை மறுத்ததன் பின்பே அரசியலுக்குள் வந்தேன். நான் அரசியலுக்கு வந்ததன் காரணம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு, நிரந்தரமான. நிச்சயமான தீர்வைப்பெறவேண்டும் என்பதற்காகவேயாகும். அதற்காக கடந்த 50 வருடங்களாக நான் போராடி வந்திருக்கின்றேன். என்னுடைய வருகை வெறும் அரசியல் மயப்பட்டதாக, அனுகூலங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அமைந்த ஒரு பயணம் அல்ல.” என குறிப்பிட்டுள்ளார்.   

Spread the love