சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் பொது முகாமையாளராக வசிம் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை உறுதி செய்த ஐ.சி.சி, புதிய பதவியை வசிம் கான் மே மாதத்திலிருந்து பொறுப்பேற்பார் எனவும் தெரிவித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, லெஸ்டர்ஷயர் கவுன்டி கிரிக்கெட், சான்ஸ் டூ ஷைன் ஆகியவற்றில் இதற்கு முன்னர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக வசிம் கான் பதவி வகித்திருந்தார். கடந்த 8 வருடங்களாக ஐ.சி.சி கிரிக்கெட் பொது முகாமையாளராக பதவி வகித்துவரும் தற்போது பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றுபவருமான ஜெவ் அலார்டைஸிடமிருந்து கிரிக்கெட் பொது முகாமையாளர் பதவியை வசிம் கான் பொறுப்பேற்கவுள்ளார். வசிம் கானின் நியமனம் குறித்து பேசிய ஜெவ் அலார்டை ஸ், வசிம் கானை ஐ.சி.சிக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். எமது கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த அனுபவம் கொண்டவரும் சர்வதேச கிரிக்கெட் கட்டமைப்பில் அனுபவம் கொண்டவருமான வசிம் கானின் வருகை சிறந்த பலனைத்தரும்.
உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டை விஸ்தரிக்க ஐசிசி எடுத்துவரும் முயற்சிகளுக்கும் எமது புதிய நிகழ்ச்சிகளுக்கான நகர்வுகளுக்கும் அவரது பிரசன்னம் முக்கியமாகும் என்றார். தனக்கு கிடைத்த பதவி குறித்து கருத்து வெளியிட்ட கான், ஐ.சி.சியில் இணைவதையிட்டு நான் பெருமை அடைகின்றேன். எனது பணிகளை ஆரம்பித்து, உறுப்பு நாடுகளுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மேலும் விஸ்தரிப்பதற்கு எனது பணியை விரைவில் ஆரம்பிக்கவேண்டும் என்பதற்காக காத்திருக்கின்றேன். மகளிர் கிரிக்கெட்டை விஸ்தரிப்பதில் ஐ.சி.சி கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை குறித்து நான் பூரிப்படைகின்றேன். அடுத்த தசாப்தத்தில் அதன் வளர்ச்சியில் எனது பங்களிப்பை விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளேன் என்றார்.