கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்ட சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஐ.சி.சி எலைட் பனல் போட்டி நடுவருமான ரொஷான் மஹாநாம, கொவிட் தடுப்பூசி அட்டைகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
இலங்கையில் தனது முதல் கொவிட் தடுப்பூசியைப் பெற்றதாகக் கூறிய மஹானாமா, குடும்ப கடமைகள் காரணமாக நாட்டில் இல்லாததால், 2வது மற்றும் 3வது டோஸ்களை இங்கிலாந்தில் பெற்றதாகக் கூறினார். இந்த நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) 2022 இல் நடுவராக பாகிஸ்தானுக்குச் செல்ல முற்பட்டபோது, இலங்கையில் மூன்று தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டை இல்லாததால், விமானத்தில் செல்வதற்கான பாதுகாப்பை நீக்குவதில் பல சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
எனவே இந்த விடயத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு சுகாதார அதிகாரிகளிடம் அவர் கோரியுள்ளார். இதேவேளை மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் அனுமதிக்கப்படுவர் என சுகாதார அமைச்சு தெரிவிததுள்ளமை குறிப்பிடத்தக்கது.