சிறுபோகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடுவோருக்கு நிதி உதவி வழங்க தீர்மானம்

இந்த வருடம் சிறுபோகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடுவோருக்காக ஒரு ஏக்கருக்கு 120,000 ரூபா நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சோளச் செய்கைக்காக இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் “சிறு உடைமையாளர் வேளாண் வர்த்தகப் பங்குடமை” வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இரசாயன உரக் கொள்வனவு, நிலம் பண்படுத்தல் மற்றும் சோள விதைகளின் கொள்வனவு என்பனவற்றுக்காக இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023 சிறுபோகத்தில் 30,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளச் செய்கையை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெரும்போகத்தில் 68,000 ஹெக்டேயரில் சோளச் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதனூடாக 280,000 மெட்ரிக் தொன் அறுவடையை எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love