சீமெந்து பக்கட்களை பதுக்கி வைத்தும், அதிக விலையில் விற்பவர்களுக்கும் எதிராக அரசாங்கம் அதிரடியாக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிராமிய வீடமைப்பு, கட்டிட பொருட்கள், தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
சீமெந்து உற்பத்தி நிலைய உரிமையாளர்கள், நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சீமெந்து விநியோகஸ்தர்களது பட்டியலின்படி தேடுதல் நடவடிக்கை நடாத்தப்படவுள்ளதோடு, நிதி அமைச்சு, நுகர்வோர் அதிகாரசபை ஆகியவற்றோடு கிராமிய வீடமைப்பு, கட்டிட பொருட்கள், தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியன இணைந்து சீமெந்து அதிக விலைக்கு விற்கப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாதமொன்றுக்கு 500,000 மெட்ரிக் தொன்கள் சீமெந்து தேவைப்படும் நிலையில், 100,000 மெற்றிக் தொன் சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலையினை அதிகரிக்கும் நோக்கில் விநியோகஸ்தர்கள் சீமெந்தினை பதுக்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.