பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் உட்பட 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு 75 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலை இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டம் சுற்றுலாவை மேம்படுத்தும் நிகழ்வாக இருக்கும் என்பதால், அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் அரசாங்கம் கொண்டாட்டங்களை முன்னெடுக்கிறதா என பாராளுமன்ற உறுப்பினர் வண. அத்துரலியே ரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் சிரமப்படும் போது கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் பெருமளவிலான பணத்தைச் செலவு செய்யக்கூடாது எனத் தெரிவித்த தேரர், குறைந்த செலவில் அதனை அடையாளமாக நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தியடைந்து வரும் நேரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பாரம்பரிய நிகழ்வுகளுடன் கொண்டாட்டத்தை நடத்துவது முக்கியம் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அரசாங்கம் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றும் இந்த நிகழ்வுக்கு தனியார் அனுசரணையாளர்களும் அனுசரணை வழங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.